எடப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-பெண் உள்பட 2 பேர் கைது
எடப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
எடப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
எடப்பாடி பகுதியில் சிலரின் வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் நேற்று எடப்பாடி பெருமாள் கோவில் காலனிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ருக்குமணி என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், அந்த வீட்டிற்குள்ளேயும் பல மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 32 மூட்டைகளில் இருந்த 1¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக எடப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 38), பெருமாள் காலனியை சேர்ந்த ருக்குமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ரேஷன் அரிசி எப்படி கிடைத்தது? பொதுமக்களிடம் இருந்து வாங்கினார்களா? அல்லது ரேஷன் கடையில் இருந்து கிடைத்ததா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story