வேறு ஒருவரை காதலித்ததால் மயங்கி விழுந்ததுபோல் நடித்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்


வேறு ஒருவரை காதலித்ததால் மயங்கி விழுந்ததுபோல் நடித்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
x
தினத்தந்தி 6 March 2022 3:58 PM IST (Updated: 6 March 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

மணப்பெண், தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை நிறுத்தவே மயங்கி விழுந்ததுபோல் நடித்ததாகவும் தெரிவித்தார்.

சென்னை பாடி அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இவருக்கும், தாம்பரம் பெரியார் நகரை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இவர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவருக்கு உடல் நிலை சரிஇல்லை என கருதி அருகில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது மணப்பெண், தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை நிறுத்தவே மயங்கி விழுந்ததுபோல் நடித்ததாகவும் தெரிவித்தார். இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் மணமகன் தினகரன் புகார் கொடுத்தார். அந்த புகாரில் திருமணத்துக்கான செலவு, மணப்பெண்ணுக்கு கொடுத்த நகை, புடவை ஆகியவற்றை பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இரு வீட்டினரும் நகை, பணத்தை திருப்பி கொடுத்து இந்த பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர்.


Next Story