சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் வாகனம் மோதி இளம்பெண் பலி; உதவி போலீஸ் கமிஷனர் மகன் கைது


சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் வாகனம் மோதி இளம்பெண் பலி; உதவி போலீஸ் கமிஷனர் மகன் கைது
x
தினத்தந்தி 6 March 2022 4:53 PM IST (Updated: 6 March 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் வாகனம் மோதி இளம்பெண் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான போலீஸ் வாகனத்தை ஓட்டிவந்த உதவி போலீஸ் கமிஷனர் மகனை போலீசார் கைது செய்தனர்.

உதவி போலீஸ் கமிஷனர் மகன்

சென்னை மதுரவாயல், கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் குமரன். இவர், சென்னை ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவில் உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிகிறார். இவருடைய மகன் லோகேஷ் (வயது 21). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

லோகேஷ் நேற்று முன்தினம் அதிகாலை தனது தந்தையின் அரசு வாகனத்தில் தாயாரை ஏற்றிக்கொண்டு எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றார். தாயை அங்கு இறக்கிவிட்டு திரும்பி மதுரவாயல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். ஈ.வே.ரா. பெரியார் சாலையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அருகே வரும்போது, அங்கு சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்த இளம்பெண் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் பலி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பலியான இளம்பெண், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அமிர்தா (30) என்பதும், பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டிவந்த லோகேஷ் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அரசு வாகனத்தை காவல்துறை அதிகாரியின் மகன் பயன்படுத்தியது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story