தூத்துக்குடியில் பிரமாண்டமாக அமைகிறது, பர்னிச்சர் பூங்கா
தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா பிரமாண்டமாக அமைய உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா பிரமாண்டமாக அமைய உள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பர்னிச்சர் பூங்கா
தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் அறைகலன் பூங்கா (பர்னிச்சர் பூங்கா) அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி அறைகலன் பூங்காைவ பிரமாண்டமாக அமைப்பதற்காக சிப்காட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மரச்சாமான்கள் உற்பத்தி
சீனா, மலேசியா, ஜொ்மனி, இத்தாலி, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டில் மரச்சாமான்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் இந்த அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளை கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், யூக்கலிப்டஸ், மலை வேம்பு, சில்வர் ஓக் போன்ற மரங்களும் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு
பர்னிச்சர் தொழிலுக்கு என்று நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைய உள்ள இந்த அறைகலன் பூங்காவில் மரஅறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறுகிறது. இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story