நகை அடகு கடையில் 3 கிலோ நகையை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது


நகை அடகு கடையில் 3 கிலோ நகையை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2022 6:42 PM IST (Updated: 6 March 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

நகை அடகு கடையில் 3 கிலோ நகையை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது

திருப்பூர் நகை அடகு கடையில் 3 கிலோ நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிய பீகாரைச் சேர்ந்த 4 பேரை ஓடும் ரெயிலில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். திரிபுரா சென்ற ரெயிலை மராட்டியத்தில் நிறுத்தி சோதனை செய்தபோது சிக்கினர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நகை அடகு கடை
திருப்பூர் கே.பி.என். காலனி 3வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்  இவர் தனது வீட்டின் முன்புறம் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.  கடந்த சில மாதங்களாக வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் என்.ஆர்.கே.புரத்தில் உள்ள வீட்டில் ஜெயக்குமார் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3ந் தேதி நள்ளிரவு கே.பி.என்.காலனியில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டின் பின்புற இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை அடகு கடையில் புகுந்து 3 கிலோ தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து தப்பினார்கள். மறுநாள் காலையில் நகை அடகு கடைக்கு வந்த ஜெயக்குமார் நகை பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீகார் ரெயிலில் தப்பினர்
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நகை அடகு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டு போலீசார் துப்பு தொடங்கினார்கள்.
அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ரெயிலில் ஏறி தப்பியதும் கண்டறியப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட 4 கொள்ளையர்கள் ஏறிச்சென்ற ரெயில் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த 4 கொள்ளையர்களும் திரிபுரா செல்லும் பாகமதி ரெயிலில் ஏறி தப்பியது தெரியவந்தது. உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ரெயிலில் போலீசார் சோதனையிட உத்தரவிட்டனர்.
4 பேரை பிடித்தனர்
இந்த நிலையில் அந்த ரெயில் மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டம் பல்லார்பூர் அருகே சென்றபோது பல்லார்ஷா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயிலில் பயணம் செய்த கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். பல்லார்ஷா ரெயில் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனையிட்டபோது அதில் 3 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, ரூ.15 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலம் ஜூனிஜி ஆராரியா பகுதியைச் சேர்ந்த மக்தாப் ஆலம் 37 முகம்மது சுபான் 30, ஜோஹிகாட் ஆராரியா பகுதியைச் சேர்ந்த பத்ரூல் 20 திலகாஸ் 21 என்பது தெரியவந்தது. அவர்கள் திருப்பூரில் உள்ள நகை அடகு கடையில் இருந்து திருடியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் நகை, வெள்ளி மற்றும் பணம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 
தனிப்படையினரிடம் ஒப்படைப்பு
இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீசாருக்கு, ரெயில்வே பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்தனர். மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் அனில்குமார், வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
பல்லார்ஷா ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொள்ளையர்கள் 4 பேரையும் கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் நான்கு பேரையும் நேற்று திருப்பூர் மாநகர தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையர்களுடன் தனிப்படை போலீசார் ரெயில் மூலமாக மாலை திருப்பூர் புறப்பட்டார்கள். இன்று திங்கட்கிழமை இரவு திருப்பூர் வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
நகை, பணத்துடன் தப்பி சென்ற கொள்ளையர்களை அவர்கள் பின்னாலேயே சென்று போலீசார் கைது செய்தது பாராட்டைப் பெற்றுள்ளது.


Next Story