போலீஸ்காரர் மீது தாக்குதல்


போலீஸ்காரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 6 March 2022 6:51 PM IST (Updated: 6 March 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் வழிவிடாமல் சென்றதை தட்டி கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பந்தலூர்

சாலையில் வழிவிடாமல் சென்றதை தட்டி கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ்காரர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் யோகேஸ்வரன். இவர் தேவாலா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இரவில் யோகேஸ்வரன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேவாலா போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். 

வழிவிடாமல் சென்ற கார்

ஏலமன்னா-மேங்கோரேஞ்ச் சாலையில் அவருக்கு முன்னால் ஒரு கார் சென்றது. அந்த காரை ஓட்டி சென்ற டிரைவரிடம் வழிவிடும்படி ஹாரன் அடித்து யோகேஸ்வரன் வலியுறுத்தினார். ஆனாலும் வழிவிடாமல் காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. 

மேங்கோரேஞ்ச் அருகே சென்றதும் காரை யோகேஸ்வரன் முந்தினார். பின்னர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காரை மறித்தார். தொடர்ந்து காரில் வந்தவர்களிடம், வழிவிடாமல் சென்றது குறித்து கேட்டார்.

தாக்குதல்

உடனே காரில் இருந்து இறங்கிய டிரைவர் உள்பட 4 பேர் கொண்ட கும்பல், போலீஸ்காரர் ேயாகேஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தியது. 

இதில் பலத்த காயம் அடைந்த யோகேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காரில் வந்த தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அசரப், அவரது சகோதரர் நஜூம்தீன், முகமது சலீம், செல்வகுமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனத்துக்கு வழிவிடாமல் தடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story