பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தோம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த சூழலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தோம் என்று நீலகிரி திரும்பிய மாணவ-மாணவிகள் கூறினர்.
ஊட்டி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த சூழலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாதுகாப்பாக இடத்தில் தஞ்சம் அடைந்தோம் என்று நீலகிரி திரும்பிய மாணவ-மாணவிகள் கூறினர்.
உணவு இல்லை
ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் நீலகிரியை சேர்ந்த மாணவர்கள் உள்பட 20 பேர் சிக்கி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. முதல் கட்டமாக 5 பேர் மீட்கப்பட்டு இருந்தனர்.
தற்போது 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த ஊட்டி அருகே குருத்துக்குளியை சேர்ந்த சோமசுந்தரம் மகள் சாகித்யா சொந்த ஊருக்கு திரும்பினார். போர் சூழல் பற்றி அவர் கூறும்போது, உக்ரைனில் 3 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நீண்ட தூரம் நடந்து சென்று பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தேன். மத்திய அரசு உதவி செய்ததால் தாயகம் திரும்பினேன். உக்ரைன் எல்லையை கடந்தது, விமானம் ஏறியது வரை வெளியுறவு அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்தது. மத்திய அரசுக்கு நன்றி என்றார்.
நாய்களுடன் வந்த மாணவி
மேலும் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த கேத்தி பாலாடாவை சேர்ந்த ஆர்த்தி பாபு சொந்த ஊருக்கு திரும்பினார். அவர் கூறும்போது, உக்ரைனில் ஆசையாக 2 நாய்களை வளர்த்து வந்தேன். போருக்கு மத்தியிலும் பிரிய மனமின்றி நாய்களுடன் பத்திரமாக ஹங்கேரி பகுதிக்கு வந்தேன். அங்கு முதலில் நாய்களுடன் விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கூண்டில் அடைத்து கொண்டு செல்ல அனுமதி கிடைத்தது. அதன்பிறகு விமானத்தில் டெல்லி வந்தேன் என்றார்.
இதேபோன்று 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த ஒற்றவயலை சேர்ந்த அன்வர் ஷாஜி மகன் சாஹல் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு தனது அனுபவம் பற்றி கூறியதாவது:- போர் தொடங்கிய நாளில் அதிகாலை 5.30 மணிக்கு கேரளாவை சேர்ந்த நண்பர்களுடன் அறையில் தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது தொலைதூரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை கேட்டு நண்பர்கள் பயத்தில் அழுதனர்.
உதவி செய்யவில்லை
அதுபற்றி விசாரித்தபோது உக்ரைன் மீது ரஷியோ போர் தொடுத்தது தெரியவந்தது. உடனே அறையை காலி செய்துவிட்டு, பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வெளியே வந்தோம். ஆனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. வாகனங்கள் ஓடாததால் பல கிலே மீட்டர் தூரம் நடந்து சென்று மற்றொரு நண்பர் அறைக்கு சென்றோம். அங்கும் சிறிது நேரத்தில் குண்டு வீசப்பட்டது. இதனால் உடைமைகளை கூட எடுக்காமல் சிறிய அளவில் இருந்த அரிசி, மைதா உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். அங்கு சுமார் 1000 பேர் இருந்தனர்.
ஆனால் எங்கும் தண்ணீர் வசதி கிடையாது. இதனால் பல நாட்கள் குளிக்காமல் இருந்தோம். இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். இதே கிராமத்தை சேர்ந்த ஷெரின் என்ற மாணவி டெல்லி வந்து இருக்கிறார். விரைவில் அவரும் சொந்த ஊர் திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story