விடிய விடிய காமன் பண்டிகை கொண்டாட்டம்
கூடலூர் அருகே விடிய விடிய காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கொட்டும் பனியிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலூர்
கூடலூர் அருகே விடிய விடிய காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கொட்டும் பனியிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
காமன் பண்டிகை
கூடலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் தலைமுறைகள் பல கடந்தாலும் தங்களது கலாச்சாரம் மாறாமல் பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஆமைக்குளம் கிராமத்தில் ரதி-மன்மதன் புராண வரலாற்றை நினைவு கூரும் வகையில் காமன் பண்டிகை நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ரதி, மன்மதன், சிவன், எமன் உள்ளிட்ட வேடமிட்டு பக்தர்கள் விடிய, விடிய காமன் கூத்து நடத்தினர். இதில் ஏராளமான மக்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தாது கலந்து கொண்டனர்.
மன்மதனை எரித்த சிவன்
இந்த பண்டிகை குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பார்வதி தேவியின் தந்தை தச்சன் யாகம் நடத்தினார். அதில் பங்கேற்க சிவனை அழைக்கவில்லை. இதனால் அவர் கோபம் அடைந்து தவத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் இந்திரலோகத்தில் புகுந்த அரக்கர்கள் தேவர்களை அச்சுறுத்தினர். இதை தடுக்க சிவனை நாட முடிவு செய்த தேவர்கள், அவரது தவத்தை கலைக்க மன்மதனை அனுப்பினர்.
அப்போதுதான் ரதி-மன்மதன் திருமணம் நடந்து இருந்தது. எனினும் அவர் சிவனின் தவத்தை கலைக்க தயாரானார். அதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்த சதி தடுக்க முயன்றார். அதை பொருட்படுத்தாமல் சென்று சிவனின் தவத்தை கலைத்த மன்மதனை அவர் வீரபத்திரராக மாறி நெற்றிக்கண் தீயால் எரித்தார். இதை அறிந்த ரதி, சிவனின் காலில் விழுந்து கணவரை மீட்டு தர வேண்டினாள். இரக்கம் கொண்ட அவர், மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த புராண வரலாற்றை நினைவு கூரும் வகையில் பக்தர்கள் வேடமிட்டு தத்ரூபமாக நடித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சிறப்பு பூஜைகள்
முன்னதாக சிவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியாக மன்மதனை சிவபெருமான் தீயால் எரிப்பது போன்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் உப்புகளை கிராம மக்கள் தூவினர். இதற்கான ஏற்பாடுகளை காமன்கூத்து பண்டிகை குழுவினர், பக்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story