இப்போது மறுஜென்மம் கிடைத்ததாக உணருகிறோம்: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உருக்கம்
உக்ரைனில் இருந்து தூத்துக்குடி திரும்பிய மாணவர்கள், ‘இப்போது மறு ஜென்மம் கிடைத்து இருப்பதாக உணருகிறோம்’ என்று உருக்கத்துடன் கூறினர்
கோவில்பட்டி:
உக்ரைனில் இருந்து தூத்துக்குடி திரும்பிய மாணவர்கள், ‘இப்போது மறு ஜென்மம் கிடைத்து இருப்பதாக உணருகிறோம்’ என்று உருக்கத்துடன் கூறினர்.
தமிழக மாணவர்கள் மீட்பு
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், அந்த நாட்டில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அங்கு மருத்துவம் பயின்ற ஏராளமான தமிழக மாணவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
உக்ரைன் நாட்டின் வின்னிட்ஸ்யா நேஷனல் மருத்துவக்கல்லூரியில் பயின்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நவநீத ஸ்ரீராம், ஹரிணி, திவ்யபாரதி, நெல்லையைச் சேர்ந்த நிவேதா, தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்த சிவசுந்தர பாண்டியன் ஆகிய 5 மாணவ-மாணவிகளும் மீட்கப்பட்டு, விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தடைந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களை பெற்றோர்கள், உறவினர்கள் ஆரத்தழுவி கண்ணீர்மல்க வரவேற்றனர்.
மாணவர் நவநீத ஸ்ரீராம், மாணவி திவ்யபாரதி ஆகிய 2 பேரும் மருத்துவக்கல்லூரியில் 5-ம் ஆண்டும், ஹரிணி 3-ம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
நம்பிக்கையூட்டிய முதல்-அமைச்சர்
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கோவில்பட்டி மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
உக்ரைன் மருத்துவக்கல்லூரியில் எங்களுடன் 150-க்கும் மேற்பட்ட தமிழக மாணவி-மாணவிகள் படித்தனர். ரஷியா போர் தொடுத்தவுடன் மிகவும் பதற்றமாக இருந்தது. பல நாட்கள் பதுங்கு குழியில் தங்கியிருந்தோம்.
எங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசி, அனைவரையும் விரைவில் மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை அளித்து தைரியமூட்டினார். மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக மீட்கப்பட்டோம்.
உணவு வசதி
கடந்த 26-ந்தேதி ஒவ்வொரு குழுவிலும் 50 பேர் வீதம் பஸ்களில் புறப்பட்டு ருமேனியா எல்லைக்கு சென்றோம். அங்கு ஒரு நாள் முழுவதும் வரிசையில் நின்று எல்லையை கடந்து ருமேனியா நாட்டுக்குள் நுழைந்தோம்.
அங்கு தயாராக இருந்த தூதரக அதிகாரிகள் எங்களை அழைத்து சென்று தங்குவதற்கான வசதிகளை செய்து தந்தனர். தமிழக அரசு சார்பிலும், ருமேனியாவில் உள்ள தமிழ் மக்கள், சமூகநல அமைப்புகள் மூலமும் எங்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தந்தனர்.
கல்வியை தொடர உதவி
பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு 4-ந்தேதி டெல்லி வந்தோம். தொடர்ந்து 5-ந்தேதி சென்னை வந்து பின்னர் தூத்துக்குடிக்கு வந்தோம். தமிழக அரசு சார்பில், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
இதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் கல்வியை தொடரவும் அரசு உதவி செய்ய வேண்டும். எங்களை மீட்டதன் மூலம் இப்போது மறுஜென்மம் கிடைத்து இருப்பதாகவே உணருகிறோம்.
இவ்வாறு அவர்கள் உருக்கத்துடன் கூறினர்.
மேலும் 2 மாணவர்கள்
இதேபோன்று உக்ரைன் கார்கிவ் கராசின் தேசிய மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நடுஅய்யாபுரத்தைச் சேர்ந்த சல்வா ஆப்ரீன் மீட்கப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு அளித்தனர்.
உக்ரைன் மேற்கு பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்த சாம் கில்டன் என்ற மாணவரும் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு பெற்றோர் இனிப்பு வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story