போடிமெட்டு தங்கும் விடுதியில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. பிரமுகர்கள் மோதல் 6 பேர் கைது
போடிமெட்டு தங்கும் விடுதியில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. பிரமுகர்கள் மோதிக்கொண்டனர். இதையடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி:
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மதன் சக்கரவர்த்தி (வயது 30). அ.ம.மு.க. பிரமுகரான இவர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியின் தம்பி ஆவார். இவர், தனது நண்பர்களுடன் போடி மெட்டு மலைப்பாதையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் தங்கியிருந்தார். அங்கு மிதுன் சக்கரவர்த்தி பேரூராட்சி தலைவராக தேர்வானதை கொண்டாடும் வகையில் விருந்து நடந்தது.
இதில் பழனிசெட்டிபட்டியை ேசர்ந்த அ.ம.மு.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது தங்கும் விடுதியிலிருந்து சற்று தொலைவில் இருந்த ஓட்டலில் இருந்து உணவு பொருட்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து உணவை ஓட்டல் நிர்வாகி பிச்சைமணி(48) மற்றும் ஊழியர் சஞ்சீவ் ஆகியோர் கொண்டு வந்தனர். அப்போது உணவு பொருட்கள் குறைவாக இருப்பதாக கூறி மதன் சக்கரவர்த்தி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தகராறு செய்து பிச்சைமணியையும், சஞ்சீவையும் தாக்கியதாக தெரிகிறது.
இந்த தங்கும் விடுதியில் அ.தி.மு.க. பிரமுகரும், போடி நகராட்சி 22-வது வார்டு கவுன்சிலாின் கணவருமான சரவணநதி (37) தங்கி இருந்தார். அவர் இதை தட்டி கேட்டார். அப்போது மதன் சக்கரவர்த்தி தரப்பினர் அவரை தாக்கினர். இதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் குரங்கணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்சக்கரவர்த்தி, கொடுவிலார்பட்டியை சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த சந்தோஷ் (24) மற்றும் சரவணநதி, அவரது கார் டிரைவர் கார்த்திக்(27), பிச்சைமணி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story