திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்
x
தினத்தந்தி 6 March 2022 8:23 PM IST (Updated: 6 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.
ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7.40 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
610 காளைகள்
கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் முருகன் தலைமையிலான கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து 610 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, 251 வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளித்தனர்.
முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு உள்ளூர் மற்றும் தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.  
45 பேர் படுகாயம்
அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு கொண்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் பிடிபட்டன. பல்வேறு காளைகள் அடங்க மறுத்து, மாடுபிடி வீரர்களை பதம் பார்த்தன. அதிலும் சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளின. இதில் மாடுபிடி வீரர்கள் 21 பேர், பார்வையாளர்கள் 10 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 13 பேர், ஊர்க்காவல் படைவீரர் ஒருவர் என 45 பேர் காளைகள் முட்டியதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசுகள்
பின்னர் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி தலைமையில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story