மயிலாப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
மயிலாப்பூரில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்ற ருக்மணி (வயது 84) என்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வழிபறி செய்து தப்பினார். அவர், தங்கச்சங்கிலியை இழுந்த போது மூதாட்டி காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சிவப்பு நிற தலைகவசம் அணிந்திருந்த நபர் இந்த வழிபறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனடிப்படையில் அந்த நபர் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மொத்தம் 150 கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3-வது தெருவை சேர்ந்த முருகன் (37) என்பது தெரிய வந்தது. அவர், போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ராயப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் என பல்வேறு இடங்களில் சுற்றினாலும், கடைசியாக போலீசாரின் பிடியில் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story