டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து தொழிலாளி சாவு 11 பேர் காயம்


டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து தொழிலாளி சாவு 11 பேர் காயம்
x
தினத்தந்தி 6 March 2022 9:39 PM IST (Updated: 6 March 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார் 11 பேர் காயம் அடைந்தனர்

கம்பம்:
தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் கம்பம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தோப்பில் புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் சேகரித்தனர். 

பின்னர் அவர்கள் சாக்குமூட்டைகளை டிராக்டர் டிரெய்லரில் ஏற்றிக்கொண்டு கம்பம் பச்சிமாங்குளம் முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள களத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். டிராக்டரை அபினேஷ் (வயது 24) என்பவர் ஓட்டினார்.


வழியில் கம்பம் பாவலர் படிப்பகம் அருகே சேனை ஓடை பாலம் வளைவில் வந்த போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் இணைப்பில் இருந்து டிரெய்லர் கழன்று அங்கேயே கவிழ்ந்தது. இதில் டிரெய்லரில் வந்த தொழிலாளர்கள் புளியம்பழம் சாக்குமூட்டைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.


இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாண்டியன் (45) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த ஈஸ்வரன்(23), திலீப் (23), மணிகண்டன் (21), பாலமுருகன் (38), தங்கசெல்வம் (36), வெள்ளைச்சாமி (22), சிவா இளவரசு (34), அஜித்குமார் (22), சேகர் (60), பிரபாகரன்(33), ஹரீம் (25) ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன், திலீப் உள்பட 5 பேர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story