உக்ரைனில் தவித்த 3 மாணவிகள் வால்பாறை திரும்பினர்


உக்ரைனில் தவித்த 3 மாணவிகள் வால்பாறை திரும்பினர்
x
தினத்தந்தி 6 March 2022 10:10 PM IST (Updated: 6 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் தவித்த 3 மாணவிகள் வால்பாறை திரும்பினர்

வால்பாறை

உக்ரைனில் தவித்த 3 மாணவிகள் வால்பாறை திரும்பினர். தமிழக மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர். 

3 மாணவிகள் தவிப்பு

கோைவ மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தீபிகா, வர்சா, மோகனா ஆகிய 3 மாணவிகளுக்கு உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்.படிக்க இடம் கிடைத்தது. 

அதன்படி அவர்கள் உக்ரைனுக்கு சென்றனர். அங்கு தீபிகா 4-ம் ஆண்டும் வர்சா, மோகனா ஆகியோர் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர். இந்த நிலையில் ரஷியா, உக்ரைன் இடையே போர் மூண்டது. 

இதனால் மருத்துவ பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் இந்த 3 மாணவிகள் உள்பட பலர் அங்கு தவித்து வந்தனர். 

வால்பாறை திரும்பினர்

எனவே அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது. அதன்படி மாணவிகள் தீபிகா, வர்சா, மோகனா ஆகிய 3 பேரும் நேற்று உக்ரைனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தனர். 

பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். 

பிறகு அவர்கள் அங்கிருந்து கார் மூலம் பாதுகாப்பாக வால்பாறை வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பயம் ஏற்பட்டது

நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உள்ள கீழ்த்தளத்தில் பாதுகாப்பாக இருந்தோம். அப்போது ரஷியா ராணுவ தாக்குதல் காரணமாக குண்டு வெடித்து சிதறியதை நேரில் பார்த்தோம். 

இதனால் மிகுந்த அச்சம் அடைந்த நாங்கள் சொந்த ஊர் செல்ல முடியுமா என்ற பயம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியாலும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் உதவியுடன் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து உக்ரைன் எல்லையில் உள்ள ரூமேனியா நாட்டுக்கு வந்தோம். பிறகு அங்கிருந்து மால்டோவா நாட்டுக்கு சென்றோம்.

அனுமதி வழங்க வேண்டும்

அங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படு செய்து இருந்த விமானத்தில் வந்து சேர்ந்தோம். போர் நடக்கும் பகுதியில் இருந்து மீண்டு சொந்த ஊர் திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

அங்கு எப்போது போர் முடிந்து சகஜ நிலை திரும்பும் என்பது தெரிய வில்லை. பல லட்சம் ரூபாய் செலவழித்து டாக்டர் ஆகும் கனவில் நாங்கள் அங்கு சென்றோம். தற்போது எங்கள் படிப்பு கேள்விக் குறியாகிவிட்டது. 


எனவே தமிழக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் மீதமுள்ள படிப்பை நாங்கள் தமிழகத்தில் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி பெற்று கொடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story