தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கடைகளுக்கு சீரான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் கடலூரில் விக்கிரமராஜா பேட்டி
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு சீரான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடலூரில் விக்கிரமராஜா கூறினார்.
கடலூர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று கடலூர் மண்டல நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சியில் மே 5-ந்தேதி நடக்கும் மாநில மாநாடு பற்றி பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு பல்வேறு இடர்பாடுகள், இடையூறுகள் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பேரிடருக்கு பிறகு வியாபாரிகள் தடுமாறி, நலியுற்று இருக்கிறார்கள்.
இதற்கு தீர்வு காணும் மாநாடாக திருச்சி மாநாடு மேடை இருக்கும். மேலும் அந்த மேடையில் பல்வேறு தீர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று, லட்சக்கணக்கான வணிகர்களின் நெஞ்சங்களில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரில் மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் திருச்சி மாநாட்டில் கடலூர் மண்டலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாடகை வசூல்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை கடலூர் மாவட்டம் அப்படியே உள்ளது. தற்போது பெட்ரோ கெமிக்கல் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் கடுமையான முயற்சி எடுத்து, தொழில்வளங்களை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்கிறார்.
கடலூர் துறைமுகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதி மார்க்கெட்டுகளில் வியாபாரிகளுக்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறைந்த இடங்களுக்கு அதிக வாடகை வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளை அரசே நவீனப்படுத்தி தர வேண்டும். இங்குள்ள வியாபாரிகளுக்கு வங்கி மூலமாக வட்டித்தொகையை கணிசமாக குறைக்க வேண்டும்.
சீரான வாடகை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது, இதை குறைக்க தமிழகம் முழுவதும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
அதன்படி தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வணிகர் சங்க நிர்வாகிகளை இணைக்க வேண்டும். ஆகவே தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கடைகளுக்கு சீரான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களையும் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்கு வணிக நல வாரிய தலைவர், இதை வேகப்படுத்த வேண்டும்.
வரி விலக்கு
உற்பத்தியாளர் விளைவிக்கும் பொருட்களை விற்கும் போது, 3 விதமான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை கட்டாயமாக தடை செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம். இதற்காக தான் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இந்த மஞ்சப்பை உற்பத்தியாளர்களுக்கு அறவே ஜி.எஸ்.டி. இல்லாமல் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
Related Tags :
Next Story