கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்க விழிப்புணர்வு முகாம் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி சுகாதாரப்பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
கண்காணிப்புக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதார பணியாளர்கள் மறுவாழ்வு குறித்து மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் மாடூர் குணசேகரன், ரத்தினம், கோவிந்தன், வங்கி அதிகாரிகள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
3 மாதத்திற்கு ஒரு முறை
பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சுகாதாரப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்து விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுகாதார பணியாளர்களின் மறுவாழ்வு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். அதன்படி 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான சுகாதார பணியாளர்கள் மறுவாழ்வு குறித்து விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனித கழிவுகளை அகற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விழிப்புணர்வு முகாம்
தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்க அனைத்து வட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story