சின்னசேலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை போலீசார் தீவிர விசாரணை


சின்னசேலம் அருகே  கழுத்தை அறுத்து பெண் கொலை  போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 6 March 2022 11:09 PM IST (Updated: 6 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

சின்னசேலம்

விதவை பெண்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்தவர் பாப்பு(வயது 60). இவருடைய கணவர் கந்தசாமி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தை இல்லாத இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் உள்ள அவரது அக்காள் சரசு வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்தார். தற்போது சரசுவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சரசுவின் மகன் கார்த்தி(29) என்பவருக்கு வருகிற 20-ந் தேதி திருமணம் என்பதால் சரசுவின் கணவர் செங்கோட்டையன்(73) தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ராசிபுரம் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் பாப்பு மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவர் செங்கோட்டையன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கே பாப்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. 
பின்னர் இது குறித்து மோகன் செல்போன் மூலம் செங்கோட்டையனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மோப்பநாய்

ஆனால் பாப்புவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை? மேலும் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீ்ட்டர் தூரத்துக்கு ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் நகை-பணம் எதுவும் கொள்ளை போகாததால் நகை-பணத்துக்காக இந்த கொலை நடந்து இருக்க இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தீவிர விசாரணை

இதையடுத்து பாப்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து செங்கோட்டையன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்புவை காலை செய்த மர்ம நபர்கள் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story