தர்மபுரி பஸ் நிலைய கழிவறையில் அரசு பஸ் கண்டக்டர் மயங்கி விழுந்து சாவு


தர்மபுரி பஸ் நிலைய கழிவறையில் அரசு பஸ் கண்டக்டர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 6 March 2022 11:11 PM IST (Updated: 6 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பஸ் நிலைய கழிவறையில் அரசு பஸ் கண்டக்டர் மயங்கி விழுந்து இறந்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). இவர் பொம்மிடி-ஓசூர் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த பழனிசாமி தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் உடன் பணியாற்றும் டிரைவர் மற்றும் சக பணியாளர்கள் பஸ் நிலையத்தில் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது நகராட்சி கழிவறைக்கு பழனிசாமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கழிவறைக்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது பழனிசாமி மயங்கி விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது. இதனால் சக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் தர்மபுரி பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story