அஞ்செட்டியில் எருதாட்ட விழா மாடு முட்டி வாலிபர் சாவு
அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிகோட்டை:
அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருதாட்ட விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் நேற்று எருதாட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகள் ஒவ்வொன்றாக மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த மாடுகளை இளைஞர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிலை நாட்டி பரிசுகளை தட்டி சென்றனர். இந்த எருதாட்ட விழாவை ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் சதீஷ் (வயது 19) என்பவர் கண்டு ரசித்தார். அப்போது சீறிபாய்ந்து வந்த மாடு ஒன்று கூட்டத்தில் புகுந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த வாலிபர் சதீசை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விழாவில் மாடு முட்டி வாலிபர் இறந்ததால் எருதாட்டத்தை போலீசார் நிறுத்தினர். பின்னர் போலீசார் மாடு முட்டி உயிரிழந்த சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எருதாட்ட விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story