ஓசூரில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஓசூரில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
ஓசூரில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூலித்தொழிலாளி
ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 23). கூலித் தொழிலாளி. இவர் வக்கீல் லே-அவுட் பக்கமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரத் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட தொழிலாளி
ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (30). கட்டிட தொழிலாளி. இவர் சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி பக்கமாக நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.700-ஐ பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காவலாளி
ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (44). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இது குறித்து செல்வகுமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story