ஆமை முட்டைகள் சேகரிப்பு
ஆமை முட்டைகள் சேகரிப்பு
ராமேசுவரம்,
சீசன் தொடங்கியுள்ள நிலையில் தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 2 மாதத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆமைகள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஐந்து வகையான ஆமைகள் உள்ளன. ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகின்றது. மேலும் ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசன் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். மாவட்டத்திலேயே தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக வனத்துறையால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசன் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது. இதனிடையே தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமைகள் முட்டையிட்டு சென்று உள்ளதா என்பதை கண்காணிக்க பணியில் ஈடுபட்டனர்.
12 ஆயிரம் முட்டைகள்
இதில் 11 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,058 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். தொடர்ந்து சேகரித்த ஆமை முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைத்தனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஒரே நாளில் 11 இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 1,058 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டுச்சென்ற 12,227 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆமை முட்டையிட்ட நாளில் இருந்து 55-ல் இருந்து 60 நாட்களுக்குள் அந்த முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்து விடும். குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்த பின்னர் இந்த குஞ்சுகள் கடலில் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனுஷ்கோடி கடற்கரையில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் முட்டைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆமை முட்டையிட்ட தேதி, எத்தனை முட்டைகள் என்பது குறித்தும் தெளிவாக எழுத்து பலகை ஒன்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story