ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 46 பேர் காயம்
கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர்.
கல்லக்குடி
திருச்சி மாவட்டம், கல்லக்குடி செல்லியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ராஜா டாக்கீஸ் ஏரிக்கரை அருகே நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக விழாக்குழுவினர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவில் காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் கல்லக்குடி பேரூராட்சி தலைவர் பால்துரை முன்னிலையில், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
முன்னதாக காலை 5 மணி முதல் மாடுபிடி வீரர்களுக்கும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 710 காளைகளுக்கும் மருத்துவ குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2 வீரர்கள் நிராகரிக்கப்பட்டனர். தேர்வான வீரர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வீரர்களுக்கு பரிசு
அதனைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக சீறிப்பாய்ந்து வந்தது. அதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது வீரர்களின் பிடியில் சிக்காமல் சில காளைகள் திமிறி ஓடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. சிறந்த மாடுபிடி வீரராக திருச்சி சாந்தமங்கலம் அன்புவும், சிறந்த மாட்டிற்கான முதல் பரிசினை புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தாம்பட்டி குமாரும் பெற்றனர்.
46 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 46 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் பலத்த காயம் அடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story