உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டபட்டோம் - சிக்கமகளூருவை சேர்ந்த மாணவி உருக்கம்
உக்ரைனில் உணவு, தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டோம் என்று சிக்கமகளூருவை சேர்ந்த மருத்துவ மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளர்.
சிக்கமகளூரு:
உக்ரைன்-ரஷியா போர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைன் போர்களமாக மாறி அங்கு வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தது.
அதன்படி உக்ரைனில் இருந்து மருத்துவ மாணவர் உள்ளிட்ட ஏராளமானவர்களை விமானம் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
மருத்துவ மாணவி வீடு திரும்பினார்
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா முத்தினகெரே கிராமத்தை சேர்ந்தவர் சந்திரம்மா. இவரது மகள் பூஜா. உக்ரைன் நாட்டில் யுபோரானியா எனுமிடத்தில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் வசித்து வந்த பகுதி அருகே போர் நடந்துள்ளது. இதனால் பூஜா, சக மாணவிகளுடன் விமானம் மூலம் டெல்லிக்கு வந்தார். பின்னர் நேற்று பெங்களூருவுக்கு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சிக்கமகளூருவுக்கு பஸ்சில் ஏறி சொந்த ஊர் திரும்பினார். பூஜா வந்ததும் பெற்றோர் அவரை கட்டி தழுவி பாசமழை பொழிந்தனர்.
மேலும் உக்ரைனில் இருந்து திரும்பிய பூஜாவை கிராம மக்களும் உற்சாகமாக வரவேற்றனர். இதுபற்றி மருத்துவ மாணவி பூஜா கூறியதாவது:-
உணவு, தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டோம்
உக்ரைனில் கடும் போர் நிலவுகிறது. இதனால் நான் உள்பட அனைவரும் சிக்கி தவித்து உயிருக்கு பயந்து இருந்தோம். ஒருவழியாக உக்ரைனில் இருந்து சிக்கமகளூருவை வந்தடைந்துள்ளேன். என்னுடைய பயணத்தை நினைக்கும்போது மிகவும் பயமாக இருந்தது. பல நாட்கள் உணவு, நீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். எப்போது பெற்றோரை பார்க்க போகிறேன் என்று இருந்தேன். இந்திய அரசாங்கள் எங்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்துவிட்டது. போர் களத்தில் இருந்து பெற்றோரை பார்த்தால் எப்படியிருக்கும் அதேபோன்று தற்போது உணர்கிறேன் என்றார். இதற்கிடையே சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்ததாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உக்ரைனில் சிக்கியிருந்தனர். அதில் ஒருவர் வீடு திரும்பி விட்டார். அருண், பிருத்வி ஆகியோர் விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 பேரை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story