பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சரியான நேரத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சரியான நேரத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 7 March 2022 2:35 AM IST (Updated: 7 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சரியான நேரத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:
  
  உப்பள்ளி கோகுல ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில போலீஸ் துறைக்கான தடயவியல் ஆய்வகத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்து பேசியதாவது:-

தடயவியல் ஆய்வறிக்கை

  வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தார்வார்-பெலகாவி இடையே ரெயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் விசாரணையை விரைந்து முடிக்க தடயவியல் ஆய்வகம் மிகுந்த பங்களிப்பை அளித்து வருகிறது.

  எந்த ஒரு வழக்காக இருந்தாலும், தடயவியல் ஆய்வறிக்கை தேவையாக இருக்கிறது.தற்போது உப்பள்ளியில் தடயவியல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தார்வார், அதை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் நடைபெறும் வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் துறைக்கு மிகுந்த பயனை அளிக்கும். சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கவும் முடியும்.

சரியான நேரத்திற்குள் நிறைவேற்றி...

  2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உப்பள்ளிக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுவதி்ல்லை என்று அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

  தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், சரியான நேரத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. திட்டங்களை நிறைவேற்றவும், அதற்கு தேவையான நிதியும் சரியான நேரத்தில் ஒதுக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டனர்.

Next Story