அயோத்தியாப்பட்டணம் அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு-உதவி கலெக்டர் விசாரணை
அயோத்தியாப்பட்டணம் அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் பிணம் தூக்கில் தொங்கியது. அந்த பெண்ணின் மர்ம சாவு குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், வெள்ளி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் மூப்பனூர் ஓலப்பட்டியை சேர்ந்த கனகா (24) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகா, தனது கணவர் ராஜேந்திரனுடன் ஓலப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் சின்னகவுண்டாபுரத்துக்கு திரும்பினர். இந்தநிலையில் நேற்று மாலை இளம்பெண் கனகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காரிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கனகாவின் மரணம் குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் வந்தனர். இந்தநிலையில் கனகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவருடைய பெற்றோர் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினியும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story