தாரமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு-உதவி கலெக்டர் நேரில் ஆய்வு


தாரமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு-உதவி கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 March 2022 2:48 AM IST (Updated: 7 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அதனை மேட்டூர் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அதனை மேட்டூர் உதவி கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
குப்பை கிடங்கு
தாரமங்கலம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சின்னாகவுண்டம்பட்டியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் குப்பை கிடங்கு அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 
இதனிடையே கீழ் சின்னாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த செங்கோடன், சக்திவேல் ஆகியோர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதனை ஏற்று பசுமை தீர்ப்பாயம் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டது.
உதவி கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தலின் படி, மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் தாரமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து, குப்பை கிடங்கால் தாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறினர். இதையடுத்து உதவி கலெக்டர் விரைவில் குப்பை கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், துப்புரவு ஆய்வாளர் கோபிநாத், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சுசீலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story