சட்டசபை தேர்தலுக்காக மேகதாது விவகாரத்தை பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்துள்ளன - குமாரசாமி குற்றச்சாட்டு


சட்டசபை தேர்தலுக்காக மேகதாது விவகாரத்தை பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்துள்ளன - குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 March 2022 3:01 AM IST (Updated: 7 March 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலுக்காக மேகதாது விவகாரத்தை பா.ஜனதா, காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நமது உரிமை

  மேகதாது பிரச்சினையை கர்நாடகம்-தமிழ்நாடு பரஸ்பர பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என்று மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்தர்சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரியே மேகதாதுவில் அணைகட்டுவது பிரச்சினை என்று கூறி இருக்கிறார். இது பெங்களூரு மக்களின் குடிநீர் சம்பந்தப்பட்டதாகும். கர்நாடகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை சேமித்து வைக்க மேகதாதுவில் அணைகட்டப்படுகிறது. இது நமது உரிமையாகும்.

  2 மாநிலங்களும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறுவதன் மூலம், மேகதாது அணை விவகாரத்தில் இருந்து மத்திய அரசு நழுவி கொள்ள பார்க்கிறது. மேகதாதுவில் அணைகட்டுவதற்காக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கி இருப்பதாக பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டதால் தான் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்காக...

  மத்திய மந்திரியே, மேகதாது விவகாரத்தை கர்நாடகமும், தமிழ்நாடும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும்படி கூறி ஒதுங்கி கொண்டுள்ளார். மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு இல்லையா?.

  இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசு புதிய விளையாட்டை தொடங்கி இருப்பதற்கான சந்தேகம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக மேகதாது அணைகட்டும் விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சிகளும் விளையாடுகிறார்கள்.
  இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Next Story