கூட்டுறவு வங்கியில் ரூ.6 கோடி நகை-பணம் கொள்ளை - கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை
பெலகாவி அருகே, கள்ளச்சாவியை பயன்படுத்தி மத்திய கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகைகள், பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெலகாவி:
கூட்டுறவு வங்கி
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா முருகோடு பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி விவசாயிகளுக்கு விவசாயக்கடன், தனி நபர் கடன், நகைக்கடன் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்த வங்கியில் ஏராளமான விவசாயிகள் கணக்கு வைத்து உள்ளனர். மேலும் தங்களது பணத்தையும் அங்கு சேமித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு மேலாளர், ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அந்த வங்கிக்கு இரவு நேர காவலாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வங்கிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் கள்ளச்சாவியை பயன்படுத்தி வங்கியின் முன்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தனர். உள்ளே சென்றதும் கதவை பூட்டி கொண்ட மர்மநபர்கள் வங்கிக்குள் இருந்த லாக்கரை உடைத்தனர். இதன்பின்னர் லாக்கருக்குள் இருந்த பணம், தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
நகை, பணம் கொள்ளை
இந்த நிலையில் நேற்று காலை வங்கியில் கொள்ளை நடந்தது பற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக வங்கி மேலாளருக்கும், முருகோடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வங்கி மேலாளரும், போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் கொள்ளை நடந்த வங்கியில் போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது ரூ.4.41 கோடி ரொக்கம், ரூ.1½ கோடி தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் உள்ள லாக்கரில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டு அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கள்ளச்சாவியை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளையை மர்மநபர்கள் அரங்கேற்றியது தெரியவந்தது.
ஊழியர்களிடம் விசாரணை
இந்த கொள்ளையில் வங்கியின் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதனால் வங்கியின் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் அளித்த புகாரின்பேரில் முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர். கூட்டுறவு வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெலகாவி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story