பெங்களூருவில் உரிமையாளர் வீட்டில் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில், வீட்டின் உரிமையாளர் வீட்டில் திருடிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
நகை, பணம் திருட்டு
பெங்களூரு சித்தாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெயநகர் முதலாவது பிளாக் தயானந்த் நகரில் வசித்து வருபவர் ஜாபி. இவரது மனைவி ஹாஜிரா. இந்த தம்பதிக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும், 13 வயது மகனும் உள்ளனர். ஜாபி 3 மாடி கட்டிடம் கொண்ட வீட்டை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடியில் ஜாபியும், அவரது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
இன்னொரு வீட்டில் அக்பர்(38) என்பவர் தனது மனைவி நஜிமா தாஜ்(32) மற்றும் பிள்ளைகளுடன் வசித்தார். மற்றொரு வீட்டில் சுமையா தாஜ்(23) என்ற இளம்பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் மகளின் திருமணத்திற்காக ஜாபியும்-ஹாஜிராவும் தங்கநகைகள் வாங்கி அதை பீரோவில் வைத்து இருந்தனர். இதுபற்றி அக்பர், நஜிமா, சுமையா ஆகியோருக்கு தெரிந்து இருந்தது. அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த நகைகளை திருட திட்டம் தீட்டினர்.
3 பேர் கைது
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜாபி வேலைக்கு சென்று இருந்தார். ஹாஜிராவும் வெளியே சென்று இருந்தார். இவர்களின் மகளும் கல்லூரிக்கு சென்று விட்டார். இதனால் 13 வயது மகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அக்பர், நஜிமா, சுமையா ஆகியோர் 13 வயது சிறுவனின் கவனத்தை திசை திருப்பி அவனை வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2.34 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.10 லட்சம் ரொக்கத்தை 3 பேரும் சேர்ந்து திருடினர்.
இந்த நிலையில் தங்கநகைகள், பணம் திருட்டு போனது குறித்து ஜாபி, சித்தாப்புரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் அக்பர், நஜிமா, சுமையா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது 3 பேரும் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனால் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், ரூ.2.80 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர். கைதான 3 பேர் மீதும் சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story