சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது- ஏற்பாடுகள் தீவிரம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டு்தலுடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டு்தலுடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு்தோறும் குண்டம் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து குண்டம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டு்தலுடன் குண்டம் விழா தொடங்குகிறது.
அம்மன் வீதி உலா
இதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சப்பரங்கள் வீதி உலா தொடங்கும். சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக சப்பரங்கள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவீதி உலாவை முடித்துக்கொண்டு 15-ந் தேதி சப்பரங்கள் கோவிலை வந்தடையும். பின்னர் அன்று இரவில் குழிகம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும்.
அதைத்தொடர்ந்து 22-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தொடர்ந்து 23-ந் தேதி இரவு புஷ்ப ரதமும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 28-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.
பந்தல் அமைக்கும் பணி
குண்டம் விழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. குண்டம் திருவிழாவின்போது திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களது நலனை முன்னிட்டு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி அளவில் தகரத்தால் ஆன சீட்டுகளை கொண்டு பந்தல் போடும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனை தரிசித்த பக்தர்கள் அங்குள்ள திருமண்ணை எடுத்து தங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு்ம், பலர் நேர்த்திக்கடனுக்காக உப்பும் மிளகும் தூவியும் சென்றனர். பெண்கள் குழந்தை வேண்டி குண்டம் அமைக்கப்படும் இடம் அருகே தீபம் ஏற்றி அங்குள்ள ஒரு கம்பத்தில் மஞ்சள் கயிறு கட்டினார்கள்.
ஏற்பாடுகள் தீவிரம்
திருவிழாவை முன்னிட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக மொத்தம் 114 இடங்களில் தற்காலிக கழிவறைகள் கட்டப்படுகிறது. குளியலறைகள் 30-ம், பக்தர்கள் வரிசையாக வருவதற்கு வசதியாக 18 ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. குடிநீர் வசதிக்காக 40 இடங்களில் குடிநீர் குழாய்களும், 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி 5 இடங்களிலும் அமைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சபர்மதி, கோவில் அலுவலர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், பி.மகேந்திரன், உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story