‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
அத்தாணி கைகாட்டி பிரிவை அடுத்த கோவில் அருகே உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடி வளர்ந்து காணப்படுகிறது. மேலும் தெருவிளக்கும் எரிவதில்லை. எனவே செடி, கொடிகளை அகற்றி, தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, அத்தாணி.
பழுதடைந்த பாலம்
பாசூர் அருகே உள்ள முக்குடிவேலம்பாளையத்தில் இருந்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் செல்லும் வழியில் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கைப்பிடிச்சுவர் இருபுறமும் பழுதடைந்து உடைந்து கிடக்கிறது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சற்று தடுமாறினாலும், வாய்க்காலுக்குள் விழுந்து விட நேரிடும். எனவே பாலத்தின் கைப்பிடிச்சுவரை உடனே பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாசூர்.
புதர் மண்டிய கழிப்பறை
சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை ஊராட்சிக்கு உள்பட்டது ஆலத்துக்கோம்பை கிராமம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றது. இதனால் பொதுமக்கள் ரோட்டோரங்களில் இயற்கை உபாதையை கழிக்கும் அவல நிலை உள்ளது. பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுக்கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூ.முத்துக்குமார், ஆலத்துக்கோம்பை.
குண்டும், குழியுமான ரோடு
கோபி-ஈரோடு ரோட்டில் இருந்து பாரியூர் ரோடு பிரிந்து செல்கிறது. அந்த ரோட்டின் ஓரிடத்தில் தார் பெயர்ந்து கல், மண்ணாக கலந்து மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
அகலப்படுத்த வேண்டும்
கோபி அருகே மேவானியில் உள்ள ரோடு மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது. எனவே உடனே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேவானி.
குரங்குகள் அட்டகாசம்
புஞ்சைபுளியம்பட்டி நகர்ப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. அவை வீடுகளுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் தின்பண்டங்களை தூக்கிச்சென்று விடுகின்றன. மேலும் மின்சார ஒயர்கள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஒயர்களை சேதப்படுத்துகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகு, புஞ்சைபுளியம்பட்டி.
ரோடு சீரமைக்கப்படுமா?
ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 2-வது வீதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த பிறகு தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த இடம் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
மணி, ஈரோடு.
Related Tags :
Next Story