‘உப்பு ஹட்டுவ' பண்டிகை கொண்டாட்டம்


‘உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 March 2022 7:09 PM IST (Updated: 7 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

படுகர் இன மக்களின் ‘உப்பு ஹட்டுவ' பண்டிகை கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி

படுகர் இன மக்களின் ‘உப்பு ஹட்டுவ' பண்டிகை கொண்டாடப்பட்டது.

‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் படுகர் இன மக்களின் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர். 

பின்னர் வீடுகளில் பணியாரங்கள், கோதுமை தோசைகள்(பொத்திட்டு) செய்து, மாடுகளுக்கு கொடுத்தனர். அதன்பின்னர் கிராமத்திற்கு அருகே உள்ள எம்மட்டி என்று அழைக்கப்படும் மாடுகள் மேய்க்கப்படும் இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தினார்கள். அங்கிருந்து வருகிற ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகே மாடுகளை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

வறட்சி நீங்கி மழை பொழியும்

இதையடுத்து அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர். இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். 

மேலும் உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கை நிலவுகிறது. பின்னர் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது.


Next Story