தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
ஆத்தூர் அருகே மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
ஆத்தூர் போலீஸ் சரகம் தலைவன்வடலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் பேச்சிராஜா (வயது 50). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பேச்சிராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்தபோதும், அவர் மது குடிப்பதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
மனைவி கண்டிப்பு
இந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல் மது குடித்து விட்டு பேச்சிராஜா வீட்டிற்கு வந்துள்ளார். இதை பார்த்து வேதனையடைந்த பத்மாவதி காலையிலேயே மது குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறீர்களே, அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள்? என்று கூறி கண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இனிமேல் மது குடிக்க கூடாது என மனைவி கண்டித்து விட்டு, சிறிது நேரத்தில் வேலைக்கு சென்றுவிட்டாராம்.
தற்கொலை
பின்னர் அவரது 2 மகன்களும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டிலிருந்த பேச்சுராஜா வீட்டின் மேற்கூரையில் உள்ள பனங்கட்டையில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மனைவி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை தூக்கிலிருந்து கீழே இறக்கியுள்ளனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக அவரது சகோதரர் செந்தில் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story