குமரி பி.ஆர். வாரியர்ஸ் அணி சாம்பியன்


குமரி பி.ஆர். வாரியர்ஸ் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 7 March 2022 7:10 PM IST (Updated: 7 March 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

மாநில கைப்பந்து போட்டியில் குமரி பி.ஆர். வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கோத்தகிரி

மாநில கைப்பந்து போட்டியில் குமரி பி.ஆர். வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கைப்பந்து போட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 10-வது ஆண்டு மாநில கைப்பந்து போட்டி, காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி, கோவை, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 48 அணிகள் பங்கேற்று விளையாடின. 

போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கன்னியாகுமரி பி.ஆர்.வாரியர்ஸ் அணி, கோத்தகிரி முத்தமிழ் நகர் அணி, சென்னை அணி மற்றும் கீழ் கோத்தகிரி சாமி அன்கோ அணி ஆகியவை அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இறுதிப்போட்டி

இதைத்தொடர்ந்து நேற்று  இரவில் அரை இறுதிப்போட்டி நடந்தது. முதல் அரை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கன்னியாகுமரி பி.ஆர்.வாரியர்ஸ் அணி, கோத்தகிரி முத்தமிழ் நகர் அணியை 25-25, 25-17 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதேபோன்று 2-வது அரை இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை அணி கீழ் கோத்தகிரி சாமி அன்கோ அணியை 25-23, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றது. 

குமரி அணி சாம்பியன்

இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் ஆட்டம் துவங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய கன்னியாகுமரி பி.ஆர்.வாரியர்ஸ் அணி 25-22, 25-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் கலந்துக்கொண்டு முதல் இடத்தை பிடித்த கன்னியாகுமரி பி.ஆர்.வாரியர்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரத்து ரொக்கம் மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.10 ஆயிரத்து 10 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், 3-ம் இடம் பிடித்த கீழ் கோத்தகிரி அணிக்கு ரூ.7 ஆயிரத்து 10 மற்றும் கோப்பையும், 4-ம் இடம் பிடித்த கோத்தகிரி முத்தமிழ் நகர் அணிக்கு ரூ.5 ஆயிரத்து 10 ரொக்கம் மற்றும் கோப்பையையும் வழங்கினார். தொடர்ந்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த 2 இதய நோயாளிகளுக்கு 6 மாத சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை ஆல்வின், அராபத் ஆகியோர் வழங்கினர். மின்னொளியில் வர்ணனையுடன் நடத்தப்பட்ட இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கோத்தகிரி கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story