விழுப்புரம் அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பிடிக்கும் அவலம் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்


விழுப்புரம் அருகே சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பிடிக்கும் அவலம் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 7 March 2022 8:29 PM IST (Updated: 7 March 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம்

குடிநீர் குழாயின் அருகில் சாக்கடை நீர்

விழுப்புரத்தை அடுத்த காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கோனூர் கிராமம். இக்கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோனூர் நடுத்தெரு பகுதியில் பொது குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. அதன் அருகில் சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி பல மாதங்கள் ஆவதால் சாக்கடை நிரம்பி அதன் கழிவுநீர், அங்குள்ள குடிநீர் குழாயின் அருகில் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் சாக்கடை நீரினால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு அப்பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதற்கு மத்தியில்தான் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

கோனூர் கிராமத்தின் மற்ற தெருக்களில் தார் சாலைகள் போடப்பட்டுள்ள நிலையில் நடுத்தெரு பகுதியில் மட்டும் இன்னும் சாலைகள் போடப்படவில்லை. இதனால் அந்த தெரு, தாழ்வான பகுதியாக இருப்பதாலும், அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாராததாலும் குடிநீர் குழாய் பள்ளத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனை சுத்தம் செய்யக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பிடிக்கும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கிடைக்கும் குடிநீர் சுகாதாரமான முறையில் இருப்பது உறுதி செய்யப்படாததால் அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயை அகற்றிவிட்டு வேறு இடத்தில் குடிநீர் குழாய் வசதியை ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

Next Story