மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
தமிழக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவியை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டினார்
தூத்துக்குடி:
தமிழக அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டி சென்னையில் கடந்த 4-ஆம் தேதி முதல் 6 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாற்று திறன் கொண்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி முத்துமீனா நீளம் தாண்டுதலில் முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து தாயார் ஜெயலட்சுமியுடன் தூத்துக்குடி வந்த முத்துமீனா வீட்டுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் என்ன காரணம் என விசாரித்து உள்ளார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக வருவதை கேள்விபட்டதும், வாய்ப்பு கிடைத்தால் முதல்-அமைச்சரை சந்திக்கலாம் என்று நின்று உள்ளனர். இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வாகன அணிவகுப்பு வந்ததும், அவர்கள் வணக்கம் தெரிவித்து உள்ளனர். அவர்களை கடந்து சிறிது தூரம் சென்ற முதல்-அமைச்சரின் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் முத்துமீனாவுடன், அவரது தாய் முதல்-அமைச்சரை சந்தித்தார். அப்போது, முத்துமீனாவின் விளையாட்டு திறமை மற்றும் ஆட்டிச பாதிப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் அவர் விளக்கி கூறினார். தொடர்ந்து முத்து மீனாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கத்தை அணிவித்து, சர்வதேச பதக்கம் வெல்லவும் வாழ்த்து தெரிவித்தார். முத்துமீனா பதக்கம் வென்ற செய்தி தினத்தந்தி ‘தேவதை’ புத்தகத்திலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story