உக்ரைன் நாட்டிலிருந்து வீடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை இந்தியாவில் தொடர அரசு உதவ வேண்டும் என பேட்டி
உக்ரைன் நாட்டிலிருந்து வீடு திரும்பிய திருவள்ளூர் மாவட்ட மருத்துவ மாணவர்கள் படிப்பை இந்தியாவில் தொடர அரசு உதவ வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவி மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய சென்னை சாலை, நேதாஜி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மூத்த மகள் சாய்லட்சுமி
இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து உக்ரைனுக்கு சென்ற தனது மகளை மீட்டு தருமாறு சாய்லட்சிமியின் பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் சாய்லட்சுமி நேற்று முன்தினம் மத்திய அரசின் மீட்பு படை விமானம் மூலம் மீட்கப்பட்டு மும்பை வந்தார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மாணவி சாய்லட்சுமியை அவரது பெற்றோர் ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மருத்துவ படிப்பை தொடர...
உக்ரைன் நிலவரம் குறித்து மருத்துவ மாணவி சாய்லட்சுமி பேசியதாவது:
உக்ரைனில் நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகம் பகுதியில் கடுமையான போர் நடந்ததாகவும், உயிரை பாதுகாத்து கொள்ள பதுங்கு குழியில் எட்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி கஷ்டபட்டதாக தெரிவித்தார். இந்தநிலையில் இந்திய மீட்பு படையினர் நாங்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டு விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவந்தனர். எங்கள் மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
உயிரை பணையம் வைத்து...
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த அனிஷ் முஹமத். இவரது மகன் சமீர் அஹமத் (வயது 18). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரத்தில் உள்ள சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்தார். இவர் உக்ரைன் கார்கிவ் நகரத்தில் சிக்கிய நிலையில், கடந்த வாரம் வாட்ஸ்-அப் வீடியோ பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு விமானம் மூலம் தனது சொந்த ஊரான ஊத்துக்கோட்டைக்கு நேற்று திரும்பினார். இது குறித்து அவர் கூறும்போது, கார்கிவ் நகரில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் குண்டுகளுக்கு இடையே உயிரை பணையம் வைத்து 1,600 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பயணம் செய்து உயிர் தப்பி வீடு திரும்பியதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story