அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கு; தமிழக அரசின் முதன்மை செயலர் திண்டுக்கல் கோர்ட்டில் சாட்சியம்


அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கு; தமிழக அரசின் முதன்மை செயலர் திண்டுக்கல் கோர்ட்டில் சாட்சியம்
x
தினத்தந்தி 7 March 2022 9:24 PM IST (Updated: 7 March 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கில், தமிழக அரசின் முதன்மை செயலர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

திண்டுக்கல்:
அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய வழக்கில், தமிழக அரசின் முதன்மை செயலர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
 ஓய்வு பெற்ற ஆசிரியர்
திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், தனது பணப்பலன் மற்றும் ஓய்வூதியத்தை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அப்போது அங்கு சூப்பிரண்டாக இருந்த சந்திரன், பணப்பலன் மற்றும் ஓய்வூதியத்தை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்றால் தனக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று செல்வராஜிடம் கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.8 ஆயிரத்தை செல்வராஜ், சந்திரனிடம் கடந்த 26-7-2018 அன்று கொடுத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா ரூபா ராணி மற்றும் போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் சந்திரன் மீது, திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, மாஜிஸ்திரேட்டு மோகனா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அனுராதா, எதிர்தரப்பு வக்கீலாக கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகினர்.
தமிழக அரசின் முதன்மை செயலர்
குற்றம்சாட்டப்பட்டவர் அரசு ஊழியர் என்பதால், சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அப்போதைய கருவூல கணக்கு ஆணையர் தென்காசி ஜவகர் இசைவு ஆணை வழங்கினார். தற்போது இவர், தமிழக அரசின் முதன்மை செயலராக உள்ளார்.
இதனையடுத்து தென்காசி ஜவகர், இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார். அதன்படி நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் வக்கீல் கண்ணப்பன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இசைவு ஆணை எப்போது வழங்கப்பட்டது என்று வக்கீல் அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை நேரில் சந்தித்து வழக்கு குறித்து தெரிவித்த அன்றே வழங்கப்பட்டு விட்டது என்று முதன்மை செயலர் தெரிவித்தார்.
விசாரணை தள்ளிவைப்பு
தொடர்ந்து, இசைவு கடிதம் கொடுப்பதற்கு முன்பு கருவூல அலுவலக கோப்புகளை பார்வையிட்டீர்களா? என்று வக்கீல் கண்ணப்பன் கேட்ட போது, கோப்புகளை பார்வையிடவில்லை என்று முதன்மை செயலர் பதில் அளித்தார்.
அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விசாரணை நடந்தது. முடிவில் வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story