விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பாதாள சாக்கடை பணியால் சேறும் சகதியுமான தெருக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் சில தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட இடங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது
விழுப்புரம்
பரவலாக சாரல் மழை
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
அதன்படி விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணி முதல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அதன் பிறகு லேசான மழை தொடங்கி பின்னர் பலத்த மழையாக வலுப்பெற்று இரவு 10 மணி வரை பெய்தது. தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.
சேறும், சகதியுமான தெருக்கள்
விழுப்புரம் நகரில் மகாராஜபுரம், ஆசிரியர் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் அதற்காக பாதாள சாக்கடை குழாய்கள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டு சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளும் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்று சொல்லப்படுவதால் இப்பகுதிகளை சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மழையினால் நள்ளிரவில் விழுப்புரம் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதியடைந்தனர். தொடர்ந்து, நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story