ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் கைதான 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருவள்ளூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் தமிழக எல்லை பகுதிகளான விஜய நல்லூரில் கடந்த மாதம் 7-ந் தேதியன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி, 7,500 கிலோ கோதுமையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செந்தமிழன்(வயது 37) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன்(38) ஆகியோரை கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கைதான செந்தமிழன், முருகன் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதை தொடர்ந்து தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தமிழன், முருகன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story