திருக்கோவிலூர் பெரிய ஏரி நீர்மட்டம் திடீர் குறைவு தண்ணீரை திறந்துவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருக்கோவிலூர் பெரிய ஏரியில் இருந்த தண்ணீரை மர்ம நபர்கள் திறந்து விட்டதால், ஏரியின் நீர்மட்டம் திடீரென குறைந்து விட்டது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. சுமார் 95 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி, கட்சிக்குவச்சான், புதூர், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர், சித்தேரி, வடமலையனூர், முதலூர், எல்ராம்பட்டு, கொடியூர், வடக்குவநெமிலி, அத்தண்டமருதூர், பெண்ணைவளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. மேலும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
நீர்மட்டம் குறைந்தது
தற்போது ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதால், தண்ணீர் தேவை குறைவாகவே இருந்தது. எனவே அடுத்து வரும் வேளாண் பணிகளுக்கு தண்ணீர் பயன்படும் என்று விவசாயிகள் எண்ணி கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஒரே நாளில் இவ்வளவு தண்ணீர் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். மர்ம நபர்கள் ஏரியில் மதகுகளை திறந்துவிட்டு, தண்ணீரை வெளியேற்றி இருக்கலாம் என்று விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஏரியை சார்ந்துள்ள விவசாயிகள் முறையாக விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது என்று திட்டமிட்டு மர்மநபர்கள் ஏரி தண்ணீரை வெளியேற்றி செயற்கையான தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயன்று இருக்கிறாா்கள்.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்திட வேண்டும். அதேபோல் ஏரிக்கு நீர் வரத்து ஆதாரமாக இருக்கும் தென்பெண்ணை ஆற்று வாய்க்காலில் முகப்பு பகுதியையும் மூடி, ஏரிக்கு தண்ணீர் வர விடாமல் தடுத்து வைத்து இருக்கிறார்கள்.
இதுபோன்று விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பெரிய ஏரியை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வையும் காத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story