நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோட்டாட்சியரிடம் 13 கவுன்சிலா்கள் கோரிக்கை
நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோட்டாட்சியரிடம் 13 கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்,
நம்பிக்கையில்லா தீர்மானம்
விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒன்றியக்குழு தலைவராக பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சிமேரி தங்கராசு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோர், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு நிதிகளை பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாகவும், அவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்கண்ணு தலைமையில் 15 கவுன்சிலர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனு
அதில் கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கையெழுத்து அவர்களுடையது இல்லையெனவும், முறைகேடாக முத்திரை இட்டு தங்களது கையெழுத்தை போட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அந்த கையெழுத்துகள் உண்மையானதா அல்லது போலியானதா என தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 13 கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கோட்டாட்சியர் ராம்குமார் முன்னிலையில் கையெழுத்திட்டு மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் சம்பந்தப்பட்ட ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையேற்று கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story