மாட்டுவண்டி மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும்
மாட்டு வண்டி மணல் குவாரியை உடனடியாக திறக்கக்கோரி தாசில்தாரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம், மார்ச்.8-
விருத்தாசலம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலம் தாசில்தார் தனபதியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலம் வட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் மணல் குவாரியை நம்பி தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாட்டுவண்டி தொழிலாளரும் சுமார் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி மாடு மற்றும் வண்டி வாங்கியுள்ளனர். தற்போது மாடுகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றோம். மேலும் மத்திய அரசு சார்பில் வழங்கும் இலவச வீடு திட்டங்கள், மாநில அரசு சார்பில் வழங்கும் அம்மா வீடு கட்டும் திட்டம் இவற்றின் பயனாளிகள் மணல் இல்லாமல் வீடு கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
எனவே வீடு கட்டுவோர் நலன் கருதியும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலன் கருதியும் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள கோ.மங்கலம், கார்குடல் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மணல் குவாரி திறந்திட ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தனபதி உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story