உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது: ‘இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும்’ ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி பேட்டி
உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது என்றும், இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி கூறினார்.
குத்தாலம்:-
உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது என்றும், இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி கூறினார்.
மாணவி ஆர்த்திகா
மயிலாடுதுறை அருகே உள்ள கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயி. இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஆர்த்திகா (வயது22) என்ற மகளும், ஆகாஷ் (19) என்ற மகனும் உள்ளனர். ஆர்த்திகா உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில் அவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்த்திகாவின் பெற்றோர் அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவாஞ்சேரியில் வரவேற்பு
மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நடவடிக்கை காரணமாக உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட ஆர்த்திகா நேற்று மயிலாடுதுறை கோவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு பாதுகாப்பாக வந்தடைந்தார். அவரை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. அருட்செல்வன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் கோவாஞ்சேரி கிராம மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து மாணவி ஆர்த்திகா கூறியதாவது:-
மாணவர்கள் ஒன்றிணைந்து...
நான் உக்ரைனில் உள்ள கார்கியூ நகரில் தங்கி இருந்தேன். அங்கிருந்து போலந்து எல்லைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். எல்லைக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களிடம் இருந்த பணத்தை கொண்டு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்தோம்.
ஆனால் தனியார் வாகனம் எங்களை எல்லை வரை கொண்டு சென்று விடவில்லை. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக எங்களை இறக்கி விட்டு சென்றனர். அதன்பிறகு சிரமப்பட்டு போலந்து எல்லையை வந்தடைந்தோம்.
சிரமமாக இருந்தது
உக்ரைன் எல்லையை கடப்பது மிகவும் சிரமாக இருந்தது. இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்தால் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு வசதியாக இருக்கும். என்னுடன் 100 மாணவர்கள் வந்தார்கள். போலந்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட நாங்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அங்கு தமிழக அரசு எங்களை நன்றாக கவனித்து கொண்டது.
படிப்பை தொடர...
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நல்லமுறையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். உக்கரைனில் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கிறேன். இந்தியாவிலேயே எனது படிப்பை தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு மாணவி கூறினார்.
Related Tags :
Next Story