கோவில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்து; பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் பக்தர்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதிஉலா நடந்து வந்தது.
தேரோட்டம்
இதில் சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரை வழிநெடுக பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் ஓட்டம்
அப்போது தேர், எலவனாசூர்கோட்டை கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் சாலை சாய்தளம் போன்று இருந்ததுடன், சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருந்தது. இந்த பள்ளத்தில் தேர் இறங்கிய போது திடீரென சாய்ந்து விழுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வால், அதிர்ச்சிக்கு உள்ளான பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.
பூசாரிக்கு சிகிச்சை
தொடர்ந்து அங்கிருந்த போலீசார் மற்றும் பக்தர்கள் யாரேனும் தேருக்குள் சிக்கி உள்ளனரா என்று பார்த்தனர். அதில் தேரில் வந்த பூசாரி சுந்தரமூர்த்தி மட்டும் சிக்கி இருந்தார்.
இதையடுத்து லேசான காயங்களுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் 2 பொக்லைன் எந்திரங்களை கொண்டு, தேரை தூக்கி நிலை நிறுத்தினர். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலுக்கு இழுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story