கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை.குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை.குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2022 10:47 PM IST (Updated: 7 March 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை

கூட்டத்தில், குடியாத்தம் தாழையாத்தம்பஜார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாழையாத்தம்பஜார் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையோரம் பச்சையம்மன் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் வீடுகளை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது என்று இடித்து விட்டார்கள். அதனால் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாடகை கொடுக்க போதிய வருமானம் இல்லை. எனவே எங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தேசிய உழவர்கள் கூட்டமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் சதானந்தம் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டம் முழுவதும் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒருமூட்டை யூரியா ரூ.700-க்கும், டி.ஏ.பி. ரூ.1,800-க்கும் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக அணைக்கட்டு, ஒடுகத்தூர், லத்தேரி பகுதிகளில் யூரியா ரூ.500 முதல் ரூ.700 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் உரம் விலை உயர்வை கட்டுபடுத்தவும், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வழக்கத்தை விட நேற்று குறைவான பொதுமக்களே மனு அளிக்க வந்திருந்தனர்.

Next Story