கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது
கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
கடலூர்,
பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வக்கீல் சந்துரு உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையான பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவர் நடிக்கும் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளிவருகிற நிலையில், இந்த அறிவிப்பை பா.ம.க. மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story