தொழிற்பேட்டை ரெயில்வே கேட்டை திறந்து விடக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 March 2022 11:08 PM IST (Updated: 7 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

குகை வழிப்பாதையை சீரமைக்கும் வரை தொழிற்பேட்டை ரெயில்வே கேட்டை திறந்து விடக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திங்கட்கிழமைதோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். 
250 ஏக்கர் விளைநிலங்கள்
இதில் சணப்பிரட்டி, பாரதியார் நகர், பாதையூர் ஆகிய 3 ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 
3 ஊர் பொதுமக்களாகிய நாங்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் நீண்ட காலமாக வசித்து வருகிறோம். மேலும் 250 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, மனநலம் குன்றியோர் விடுதி, முதியோர் காப்பகம் உள்ளது. தொழிற்பேட்டைக்கு அருகே உள்ள ரெயில்வே கேட் அருகில் குகைவழிப்பாதை பணி கடந்த 2 ஆண்டாக நடைபெற்ற வேலையில், இன்னும் நிறைவுபெறவில்லை.
குகைவழிப்பாதை
குகைவழிப்பாதையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பாதை கரடுமுரடாக உள்ளது. மேலும் நீர்ஊற்று இருப்பதால், தண்ணீர் வந்து கொண்டே உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகனங்களும் செல்ல முடியவில்லை. குகைவழிப்பாதையில் ஒரு மின்விளக்கு கூட அமைக்கப்படவில்லை. இருளாக இருப்பதை பயன்படுத்தி பல சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் அதன் வழியாக செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைகின்றனர்.   இந்நிலையில் பணிநிறைவு பெறாதநிலையில் எந்தவித முன்னறிவிப்பு இன்றி சம்பந்தப்பட்ட தொழிற்பேட்டை, சணப்பிரட்டி இடையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. 
முறையாக பராமரிப்பு இல்லாத இந்த குகைவழிப்பாதையை சீரமைக்கும் வரை எங்களுக்கு மூடப்பட்ட கேட்டை திறந்து பயன்பாட்டிற்கு வழிவகை செய்யவும். விரைவாக சம்பந்தப்பட்ட குகைவழிப்பாதையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story