ரூ.1¾ கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் ரூ.1¾ கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்;
திருவாரூரில் ரூ.1¾ கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ரூ.1 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது
சக்கர நாற்காலிகள்
தமிழக அரசு அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகிறது.
தையல் எந்திரங்கள்
மேலும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு வைப்பு தொகைக்கான ரசீது, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்கள் சுயமாக தொழில் செய்து அவர்களை தங்களது சொந்த காலில் நிற்பதற்கு இலவச தையல் எந்திரங்களும் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story