கரூரில் பஸ் பயணிகள் சாலை மறியல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 March 2022 11:13 PM IST (Updated: 7 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்,
பயணிகள் காத்திருப்பு
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினந்்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2 மணி நேரமாக ஈரோடு, சேலம், மற்றும் கோவை உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படவில்லை என தெரிகிறது.    இதனால் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று பஸ்கள் இயக்க படாதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். 
சாலை மறியல்
அப்போது அங்கு இருந்தவர்கள் முறையாக பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் பஸ் நிலைய நுழைவு வாயிலில் முன்பு திரண்டனர். பின்னர் மேற்கு பிரதட்சண சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த கரூர் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து பயணிகளின் வேண்டுகோளை ஏற்று பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து கைக்குழந்தைகளுடன் இருந்த பெண்கள், வயதான முதியவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளும் பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ்களில் ஏறி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story